கரூர் மாவட்டம், குளித்தலையில் அரசு தலைமை மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி கடந்த சில நாட்களாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் போராடி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக கரூர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் குளித்தலைப் பகுதியில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு இன்று(ஜூன்.28) நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குளித்தலை நகராட்சி திமுக பெண் கவுன்சிலரின் கணவரும், முன்னாள் கவுன்சிலருமான ஆனந்தகுமார் மூடப்பட்ட கடைகளை திறக்கச்சொல்லியதால் பாரதிய ஜனதா கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையிலான காவல் துறையினர் பாரதிய ஜனதா கட்சியினரை மட்டும் வலுக்கட்டாயமாக காவல் துறை வாகனத்தில் ஏற்ற முயற்சித்தனர்.
இதனால் பாரதிய ஜனதா கட்சியினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர், காவல்துறை சீருடையில் பட்டனை கழற்றிவிட்டு காவல் துறை யார் என்று காட்டுகிறேன் என நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
இதனை செய்தியாக்கி கொண்டிருந்த கரூர் ஈடிவி பாரத் செய்தியாளரை செய்தி சேகரிக்க விடாமலும் குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தடுத்தார். பின்னர் காவல் துறையினர் பாரதிய ஜனதா கட்சியினர் வலுக்கட்டாயமாக 24 பேரை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் வருகை தரும் முதலமைச்சரைக் கண்டித்து பாஜக கறுப்புக்கொடி போராட்டம் அறிவிப்பு! தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம், ”குளித்தலை மக்களின் நலன் கருதி நடைபெறும் போராட்டத்தை சீர்குலைக்க திமுகவினர் முயற்சி செய்ததாகவும், அதனை காவல் துறை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாகவும், ஒரு தலைபட்சமாக நடந்து கொள்ளும் காவல் துறையை வன்மையாக கண்டிப்பதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் ஜூலை 2ஆம் தேதி கரூர் வருகை தரும்பொழுது மாவட்டம் முழுவதும் குளித்தலை அரசு தலைமை மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபடும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை