கரூர்: கரூர் மாவட்டத்தில் 9 ஆண்டு பாரதிய ஜனதா கட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று (ஜீன் 13) இரவு நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கலந்து கொண்டார். இக்கூட்டம் பாஜக மாவட்ட தலைவர் செந்தில் நாதன் தலைமையில் நடைபெற்றது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், ”இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சி 9 ஆண்டு சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த அரசும் மேற்கொள்ளாத புதிய திட்டங்களை ஏற்படுத்தி இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது. அடுத்து வர உள்ள 2024 மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்து, பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்பார்” என தெரிவித்தார்.
இந்தி மொழி திணிப்பு:தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் இந்தி மொழி திணிப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளது தொடர்பாக ஈடிவி செய்தியாளர் கேட்டதற்கு, ”தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையை மாநில அரசு கடைபிடிக்கிறது. மத்தியில் மும்மொழி கொள்கை நடைமுறையில் இருந்து வருகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் மும்மொழி நடைமுறையில் இருப்பது வழக்கமான ஒன்றுதான்” என கூறினார்.
பட்டமளிப்பு விழா தாமதம்:தமிழ்நாட்டில் பட்டமளிப்பு விழா தாமதமாவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”கரோனா காலகட்டத்திற்கு பிறகு பல பல்கலைக்கழகங்களில் இன்னும் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. ஆளுநர்தான் பட்டம் அளிக்க வேண்டும் என்ற நிலை இல்லை. பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு அவர்களாகவே வழங்கி விடுகின்றனர். இதனால் மாணவர்களின் மேற்படிப்பு பாதிக்கப்படவில்லை.
ஆளுநரை குறை கூற வேண்டும் என சிலர் திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வருகின்றனர். தமிழ்நாடு ஆளுநர் பல மசோதாக்களை திருத்தங்களை செய்யக்கோரி திருப்பி அனுப்புகிறார். ஆனால், தமிழ்நாடு அரசு விரைவாக பதில் அளிக்காமல் அதனை திருத்தங்கள் மேற்கொண்டு திருப்பி அனுப்பாமல் மசோதாவை மாநில அரசே திரும்ப பெற்றுக் கொண்டது” என தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் குறித்து விமர்சனம்:பாஜக மாநில தலைவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு “அதிமுக - பாஜக கூட்டணி உறவில் எந்த விரிசலும் ஏற்படவில்லை. ஆனால், இது போன்ற சில விமர்சனங்கள் துரதிஷ்டவசமானது. அதிமுக பாரதிய ஜனதா இனி இதை பேசி பெரிய பிரச்னையாக மாற்றி விடக்கூடாது.