கரூர்:சமூக வலைத்தளத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை வெளியிட்டு தவறான கருத்துக்களைப் பதிவிட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் அடுத்த பனையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் முருகேசன் (44) பாஜக கரூர் மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பில் உள்ளார். இவர் தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புகைப்படத்திற்குப் பொட்டு வைத்து, மாலை அணிவித்து இறந்தது போல், தவறாகச் சித்தரித்துப் பதிவிட்டுள்ளார்.
மேலும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின், மாவட்ட துணைத் தலைவராக உள்ள தீபக் என்பவரின் புகைப்படத்தையும் இணைத்து தவறான கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களைப் பார்த்த திமுக நிர்வாகி தீபக், மன உளைச்சலுக்கு ஆளாகி முதலமைச்சர் குறித்து தவறான புகைப்படத்தைப் பதிவிட்ட முருகேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று (டிச.31) கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களைப் பதிவிட்டதற்காக பாஜக நிர்வாகி முருகேசனை போலீசார் கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கரூரில் தமிழக முதலமைச்சர் குறித்து சமூக வலைத்தளங்களில் பாஜக நிர்வாகி அவதூறு பரப்பியதாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:கரூரில் பெண்களைக் குறி வைத்து நூதன மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்..!