கரூர்:நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” யாத்திரை நிகழ்ச்சியை முடித்துவிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கரூர் வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை பாஜகவும், பிரதமர் மோடியும் எடுத்து இருப்பதால், பாலஸ்தீன மக்கள் எதிரானவர்கள் அல்ல. இந்தியா நடுநிலை என்ற நிலைப்பாட்டை கையில் தொடர்ந்து எடுத்து வந்தது.
ஆனால் தற்போது, இந்தியாவைப் பொறுத்தவரை பிரதமர் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் போரினால் அவதி கூறும் பாலஸ்தீன மக்களுக்கு துணை நின்று நிவாரணப் பொருட்களை பிரதமர் அனுப்பி வைத்துள்ளார். இந்தியா பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. அதனால்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக, இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநர் மீது திமுக அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு, தமிழக ஆளுநர் 13 மசோதாவிற்கு கையொப்பமிடவில்லை என திமுக அரசு கூறுகிறது. இவற்றில் 12 மசோதாக்கள் பல்கலைக்கழகங்கள் சம்பந்தப்பட்ட மசோதாக்கள். அனைத்திலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநர் வசமுள்ள அதிகாரத்தை தமிழக முதலமைச்சர் வசம் ஒப்படைக்கும் வகையில் சட்டம் மசோதா நிறைவேற்றி அனுப்பி உள்ளனர்.
இவை அனைத்துமே இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது. கல்வி மாநில பட்டியலில் இருந்தாலும் ஒன்றிய அரசு கல்வியின் தரம் குறித்து வழிகாட்டுதலை வழங்கும் அதிகாரம் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் பல்கலைக்கழகங்களில் அதிகாரம் உள்ள பல்கலைக்கழக வேந்தர் பதவி அரசியல் சார்புடையவர்கள் வசம் இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளது.
ஆனால் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள 12 மசோதாக்கள் ஆளுநர் வசம் உள்ள பல்கலைக்கழக வேந்தர் பதவியை பறித்து தமிழக முதலமைச்சரே நிர்வகிக்கும் வகையில் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் என்பதால் 12 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் வசமுள்ள 12 பல்கலைக்கழக மசோதாக்கள் தவிர மீதமுள்ள சித்த மருத்துவ மசோதா என்பது நீட் நுழைவுத் தேர்வு போல தமிழக அரசு நுழைவுத் தேர்வு ஒன்று நடத்தி சித்த மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என திருத்தம் செய்து மசோதா நிறைவேற்றியுள்ளனர்.