கரூர்: கிராம சபை கூட்டங்கள் கரூர் மாவட்டத்தில் முறையாக நடை பெறுவதில்லை என கரூர் மாவட்ட பாஜக குற்றம் சாட்டி உள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் எதிர்வரும் ஆகஸ்ட் 15 செவ்வாய்க்கிழமை அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த கிராம சபைக் கூட்டங்கள் முறையாக பொதுமக்களுக்கு அழைப்பு கொடுத்து நடத்தப்படுவதில்லை என கரூர் மாவட்ட பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் இது குறித்து, மாவட்ட பொதுச் செயலாளர் நவீன் குமார் தலைமையில் இன்று (ஆக.07) கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் புகார் மனு அளித்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்ட பொது செயலாளர் நவீன்குமார் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரித்யோக பேட்டியில், "கரூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் ஒவ்வொரு முறை நடத்தும் பொழுதும், குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்து, ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள் தங்கள் கிராமம் சார்ந்த பொது பிரச்சனைகளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முன்மொழிவது தான் வழக்கம்.
விவாதத்துக்கு பிறகு ஊராட்சி மன்ற தலைவர் அதனை தீர்மானமாக நிறைவேற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே கிராம சபை கூட்டம் தொடர்பான சட்ட விதிமுறை கூறுகிறது. ஆனால் கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் கிராம சபை கூட்டங்கள் பெயரளவில் நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கி அடுத்த பத்து நிமிடத்தில் கூட்டம் நிறைவடைவதால் கிராம சபை கூட்டத்தால் எந்த பயனும் இல்லை.