கரூர்:கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, குளித்தலை, புகழூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஐந்தாயிரம் ஏக்கரில் வெற்றிலைப் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பயிரிடப்படும், கற்பூரவல்லி, வெள்ளைக்கொடி உள்ளிட்ட வெற்றிலை ரகங்கள் முக்கிய நகரங்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல்செய்யப்படுகிறது.
ஊரடங்கு காரணமமாக திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் வெற்றிலை கொள்முதல்செய்வதற்கு இடைத்தரகர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், வெற்றிலை கொடிக்கால் வயலில் வெற்றிலையை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்ப முடியாத இக்கட்டான சூழ்நிலை உழவர்களுக்கு உள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் வேளாண்மையை மேம்படுத்த வழங்கும் மானியம், கடனுதவி போன்றவை இந்த உழவர்களுக்குக் கிடைப்பதில்லை.
இது குறித்து நம்மிடையே பேசிய வெற்றிலை உழவர் கலைமோகன், "வெற்றிலை வேளாண்மையை நான் மூன்றாவது தலைமுறையாக மேற்கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு கட்டுப்பாடுகள், திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளுக்குத் தடை போன்றவற்றால் பயிரிடப்பட்டுள்ள வெற்றிலை பறிக்கப்படாமல் வயலிலேயே காயும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெற்றிலையை ஒரு ஏக்கரில் பயிரிடுவதற்கு சுமார் 10 லட்சம் ரூபாய்வரை செலவு செய்ய வேண்டியது உள்ளது. மற்ற வேளாண் பகுதிகளைப் போல குறைந்த அளவு முதலீட்டை வெற்றிலை வேளாண்மையில் மேற்கொள்ள முடியாது.
கிணற்றுப் பாசனம் மூலம் டீசல், பெட்ரோல் மோட்டார்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சிவருகிறோம். வெற்றிலை பறிக்க ஆள்கள் கூலி, பராமரிப்புச் செலவு ஆகியவை கூடுதலாக இருந்தாலும் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும்போது அதிக அளவில் அறுவடைசெய்து குறைந்தபட்ச லாபம் ஈட்டிவந்தோம்.