கரூர்: விளையாட்டு அரங்கில் நேற்று 74ஆவது இந்திய குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கரூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய, 330 அரசு ஊழியர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிலையில் மது விற்பனையில் வருவாய் ஈட்டியதற்காக டாஸ்மாக் விற்பனையாளர், இரண்டு மேற்பார்வையாளர், மாவட்ட மேலாளர் என 4 பேருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை நெட்டிசன்கள் வாட்ஸ்அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து பதிவிட்டனர். இது தற்பொழுது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள், அதிக மது விற்பனை செய்யும் நபருக்கு மட்டும் தான் விருதா? அதிகம் மது குடிக்கிறவங்களுக்கு எப்ப விருது கொடுப்பீங்க? என நடிகர் வடிவேல் போன் செய்து கேட்பதைப் போல, கிண்டலான மீம்ஸ்களைப் பதிவிட்டு வருகின்றனர்.