கரூர்:மண்மங்கலம் தாலுகா வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அருகம்பாளையம் செம்மலர் நகர் அருந்ததியர் குடியிருப்பில், சுமார் 100 குடும்பத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அருகம்பாளையம் செம்மலர் நகர் பகுதியின் சாலை ஓரமாக மாரியம்மன் கோயில் மற்றும் கருப்பண்ணசாமி கோயில் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மேலும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோயிலில் தினமும் 2 கால பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இதனிடைய அந்த கோயிலின் பின்புறம் காலியாக உள்ள இடத்திற்கு உரிமையாளரான அருகம்பாளையம் வேலுச்சாமி என்பவர், அவரது இடத்தை சீரமைத்து மனைகளாக பிரித்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்.
இந்நிலையில், அந்த மனைகளுக்கு செல்வதற்கு ஏற்கனவே ஒரு பாதை இருந்த நிலையில், கோயிலின் அருகேயும் ஒருபாதை அமைக்க திட்டமிட்டு செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும் இந்த திடீர் பாதையால் கோயில் திருவிழாவின் போது, சாமி கும்பிட முடியாத சூழல் ஏற்படும் எனவும் கருதியுள்ளனர்.
ஆனால், வேலுச்சாமி காதப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் உதவியுடன், சாலை ஓரமாக உள்ள அரசு புறம்போக்கு இடத்தை காலி செய்ய 2 முறை நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, நேற்று (செப்டம்பர் 1) காலை சுமார் 11 மணியளவில் காவல்துறை உதவியுடன் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு வந்து கருப்பண சாமி கற்கோயிலை அகற்றியதால் அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையெடுத்து பொதுமக்களை 15-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் வெங்கமேட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து இரவு 6.30 மணியளவில் விடுவித்தனர். மேலும், ஜெசிபி இயந்திரத்தை கொண்டு வந்து கருப்பணசாமி கோயிலுக்காக போடப்பட்டிருந்த பந்தலையும் சாமி சிலைகளையும் அகற்றினர்.