கரூர்: கரூர் மாநகராட்சியில் வருவாயை உயர்த்துவதற்காக மண்டல வாரியாக 5 இடங்களில் சிறப்பு வரி வசூல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரை வரி வசூல் செய்யப்படுகிறது. இந்த வரி வசூல் மையங்களில் சொத்து வரி, குடிநீர் வரி, காலி மனை வரி, பாதாள சாக்கடை வரி, கடை வாடகை வரி மற்றும் மாநகராட்சிக்கு செலுத்தும் தொழில்வரி ஆகியவை வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கரூர் காந்திகிராமம் தெற்கு பகுதியில் அமைந்துள்ள முகாமில் வரி செலுத்துவதற்காக, அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர் சென்றுள்ளார். அதன் பேரில், கரூர் மாநகராட்சியில் பணியாற்றும் வருவாய் ஆய்வாளர் குழந்தைவேல் மற்றும் அவரது உதவியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மாணிக்கவாசகத்தின் வீட்டை பார்வையிட்டு வரி அளவீடு செய்து கூறியுள்ளனர்.
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகை கூடுதலாக இருந்ததால், மாணிக்கவாசகத்திடம் வரியை குறைத்து கணக்கிட்டு தருவதாகவும், அதற்காக 20 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக தரும்படியும் இவர்கள் கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மாணிக்கவாசகம், கரூர் - ஈரோடு சாலையில் இயங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பின்னர், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் அறிவுரைப்படி, லஞ்ச பணத்தை வழங்குவதாக மாணிக்கவாசகம் கூறினார். அப்போது, குழந்தைவேல் மற்றும் ரவிச்சந்திரன் இருவரும், லஞ்சப் பணத்தை காந்திகிராமம் பகுதியில் செயல்பட்டு வரும் டீக்கடை உரிமையாளர் பாலாஜியிடம் கொடுத்துவிடும்படி கூறியுள்ளனர்.