புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வம் (45). இவர், திருச்சி மாவட்டம், நெடுங்கூர் அருகேயுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் வசித்து வந்தார். சாலை அமைக்கப் பயன்படுத்தப்படும் தார் மூலப் பொருள் விற்பனை செய்யும் ஒப்பந்ததாராகவும்,
அமமுக வர்த்தக அணி செயலாளராகவும் இருந்தார்.
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி, பாண்டிசெல்வம் அவரது வீட்டின் பின்புறம் குளியலறையில் ஆண் உறுப்பு அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இதுகுறித்து சிறுகனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட பாண்டிசெல்வத்தின் வீட்டில் எதிர்புறம் 23 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.
அவரது கணவர் பொன்னம்பலம் (30). லாரி ஓட்டுநரான இவர் பணி நிமித்தமாக செல்லும்போது சங்கீதா அவரது தாய் வீடான பெரம்பலூர் மாவட்டம், ஆயக்குடி கிராமத்திற்குச் சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதில் சந்தேகமடைந்த லாரி ஓட்டுநர் பொன்னம்பலம் தனது மனைவி சங்கீதாவிடம் விசாரித்தபோது, வீட்டில் இல்லாத சமயத்தில் எதிர்வீட்டு அமமுக பிரமுகர் பாண்டிசெல்வம் வீட்டுக்குள் வந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததைக் கூறி அழுதுள்ளார்.
அப்போது, ஆத்திரமடைந்த பொன்னம்பலம், அவரது உறவினர் பசுவராஜ் (30), அவரது சகோதரர் தர்மேஷ் (27) ஆகிய மூவரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த பாண்டிசெல்வத்தின் ஆண் உறுப்பை அறுத்ததுடன் ஆத்திரத்தில் கழுத்தில் குத்தி கொலை செய்தனர்.
இதையடுத்து காவல் துறையினர் பொன்னம்பலம், அவரது மனைவி சங்கீதா, உறவினர் பசுவராஜ், ஆகிய மூவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், இக்கொலை வழக்கு தொடர்பாக காவல் துறையினரால் தேடப்பட்டு வந்ததாகக் கூறப்படும் பசுவராஜ் சகோதரர் தர்மேஷ் குளித்தலை குற்றவியல் நீதிமன்ற எண் 1 இல் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து, நீதிபதி 15 நாள்கள் கரூர் கிளைச் சிறையில் அவரை அடைக்க உத்தரவிட்டார்.