அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ என்ற பெயரில் திமுக தனது பரப்புரைப் பயணத்தை தொடங்கியுள்ளது. அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அண்மையில் தங்களது பரப்புரைப் பயணத்தை தொடங்கினார்.
அந்த வகையில், திமுக மாநில விவசாய அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சின்னச்சாமி இன்று (டிச. 15) கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த வேலம்பாடி ஊராட்சியிலிருந்து தனது பரப்புரைப் பயணத்தை தொடங்கினார். பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள், வர்த்தகர்களைச் சந்தித்துப் பேசிய அவர், அவர்களது தேவைகளைக் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, பள்ளப்பட்டி சந்தைபேட்டை பகுதியில் இஸ்லாமிய சமூக உலமாக்களைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சின்னச்சாமி தெரிவிக்கையில், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் உத்தரவுப்படி, 16 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், இன்று அரவக்குறிச்சியிலிருந்து எனது பரப்புரையைத் தொடங்கியுள்ளேன்.
இது வழக்கமான பரப்புரை அல்ல; மக்கள் சந்திப்பு இயக்கமாக நடத்துகிறோம். அதாவது மக்களைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்துப் பெற்று, அதற்கேற்ப தேர்தல் அறிக்கை தயார் செய்யத்தான் இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறுகிறது.