கரூரில் ஆலோசனைக் கூட்டம்: கடுப்பான விஜய பாஸ்கர் கரூர்: மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் 1989, 1998, 2009, 2014 என நான்கு முறை கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக மூத்த தலைவர் மு.தம்பிதுரை, மேலும் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். அதிமுக மூத்த தலைவர் மு.தம்பிதுரைக்கு ஆதரவாகவும் ஜோதிமணிக்கு எதிராகவும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், குறிப்பாக 2019 ஆம் ஆண்டு ஜோதிமணிக்கு எதிராகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதில் முக்கியத்துவம் என்னவென்றால் 1984 ஆம் ஆண்டுக்கு பிறகு 2019ல் தான் காங்கிரஸ், கரூர் மக்களவைத் தொகுதியை கைப்பற்ற முடிந்தது. அதற்கு தேசிய அரசியல் வரை ஜோதிமணி எம்.பியின் செல்வாக்கும், அரசியல் எளிமையும் பொதுமக்களிடம் பழகும் அணுகுமுறையும் முக்கிய காரணமாக அமைந்தது. கரூர் மக்களவைத் தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டையாக உள்ளது என்று அதிமுகவினர் பெருமையாக பொதுக்கூட்டங்களில் பேசிக்கொள்ளும் அளவிற்கு வலிமை வாய்ந்ததாக இருந்தது.
HISTORY REPEATS : மாறி மாறி கரூரை தன்வசப் படுத்தும் கட்சிகள்:கரூர் மக்களவைத் தொகுதி 1957 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதல் 1984 வரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கரூர் தொகுதியை தன்வசம் வைத்திருந்தது. அதன் பின்னர் இரண்டு முறை அதிமுக வசம் இருந்த கரூர் எம்பி தொகுதியை, திமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மூப்பனார் அணி சார்பில் போட்டியிட்ட கே.நாட்ராயன் 1996ல் வெற்றி பெற்று கரூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினரானார்.
அப்போது அதிமுக-வின் ஆதரவு பெற்று, மத்தியில் ஆட்சி அமைத்த வாஜ்பாய் ஆட்சி இரண்டே ஆண்டுகளில் கவிழ்க்கப்பட்டதால், மீண்டும் நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்ற நிலையில், 1998ல் தம்பிதுரை இரண்டாவது முறையாக போட்டியிட்டார். இந்த தேர்தலில், அதிமுக மீண்டும் கரூர் தொகுதியை தன்வசப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அடுத்த முறை அதிமுகவில் அடுத்த கட்ட தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி போட்டியிட்டு அதிமுக வசம் மீண்டும் கரூர் தொகுதியை ஒப்படைத்தார்.
அதற்கு பின்னர், நடைபெற்ற 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், முதன்முறையாக திமுக நேரடியாக, கரூர் தொகுதியில் போட்டியிட்டு, தொடர்ந்து அதிமுக வசம் இருந்த, கரூர் மக்களவைத் தொகுதியை கைப்பற்றியது. கரூரை சேர்ந்த தொழிலதிபர் கே.சி. பழனிசாமி ஐந்து ஆண்டுகள் முழுமையாக கரூர் எம்பியாக பதவி வகித்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2009 மற்றும் 2014 ஆகிய இரு மக்களவை தேர்தலிலும் தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுகவை சேர்ந்த மூத்த தலைவர் மு.தம்பிதுரை எம்பியாக பதவி வகித்தார். இதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் அதிமுகவின் மாவட்ட செயலாளராக இருந்து வரும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
எம்.பி.க்கும், மாஜி அமைச்சருக்கும் இடையேயான தகராறு:அதிமுகவின் எஃகு கோட்டையான கரூர் மக்களவைத் தொகுதியை, அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக கட்சிக்கு சென்ற செந்தில் பாலாஜியை வைத்து, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, கரூர் மக்களவைத் தொகுதியை 1984 க்கு பிறகு, 2019-ல் மீண்டும் காங்கிரஸ் வசம் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் மக்களவைத் தொகுதியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதிமணி நான்காண்டுகளை நிறைவு செய்துள்ளார். கரூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு காங்கிரஸ் எம்பிக்கும், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் இடையே, அவ்வப்போது அறிக்கை போர் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தொடர்ந்து அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
மத்திய அரசு திட்டங்களின் ஆலோசனைக் கூட்டம்:இந்நிலையில் தான் இன்று(ஜூன்23) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்(DISHA) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்படும் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள், ஊரக வளர்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் ஜல் ஜீவன் திட்டம் என மத்திய அரசினால் பல்வேறு அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் திட்ட செயல்பாடுகள் குறித்து அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் எம்பி ஜோதிமணி ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.
தொடர்ந்து கரூர் எம்பி தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம், மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதனிடையே அங்கு, அதிமுக சார்பில் பல்வேறு கோரிக்கை மனுக்களை அழிப்பதற்காக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தலைமையில் மூன்று துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்று வருவதால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அறையில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அமர வைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அலுவலக வளாகத்திற்கு காத்திருந்தனர். பின்னர் கரூர் எம்பி ஜோதிமணி ஆய்வு கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியே சென்றார். அதன் பின்னர் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அறைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளுடன் சென்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் குடகனாறு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரில் கழிவுநீர் கலந்து ஆற்றில் வருவது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றும்
கரூர் ஈரோடு சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையை அகற்ற வேண்டும் என்றும் ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில், குப்பைகளை கட்டணம் பெற்றுக்கொண்டு கரூர் மாநகராட்சி பெற்றுக் கொள்ளப்பட்டது நிறுத்தியதையடுத்து, மீண்டும் அதனை பெற்றுக்கொள்ள வலியுறுத்தி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தி கோரிக்கை மனுவை அளித்தார்.
கொந்தளித்த அதிமுகவினர்:கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று இருந்தபோது, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதற்காக எம்பி ஜோதிமணி ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே செல்லும் வரை சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்த சம்பவம் கரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேரில் கோரிக்கை மனு அளிக்கப்படுவது தெரிந்தும், வேண்டுமென்றே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காக்க வைக்கபட்டதாக அதிமுக தொண்டர்கள் புலம்பிச் சென்றனர். திமுக கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளராகவும், தமிழக அமைச்சராகவும் உள்ள செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறையினரின் நெருக்கடியால் திமுக கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களே கால அவகாசமாக உள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரின் நகர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:நிரந்தரமாக கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்க அரசு முன்வராது-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம்