கரூர்:மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவில் வசிக்கும் மாற்றுத்திறனாளி ஞானசேகரன் என்கிற சசிகுமார் பி.காம் படித்த பட்டதாரியான இவர் சுயமாக சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட அவருடைய உயரம் 3.5 அடி. இதனால் தான் பள்ளி, கல்லூரி செல்லும் காலம் முதல் அனைவரும் பார்வையில் இருந்தும் வேறுபட்டு காணப்பட்டார்.
ஆனால், நம் அனைவரையும் போல, அனைத்து வேலைகளையும் தானே செய்து கொள்ளும் திறன் கொண்ட சசிகுமாருக்கு வயது 40 கடந்த பொழுதும், திருமணம் ஆகவில்லை. அவரது தாய் சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த போதும், அவரை தன் சுய சம்பாத்தியத்தில் தனது மாமா உதவியுடன் பாதுகாப்பாக பராமரித்து வருகிறார்.
வெங்கமேடு பகுதியில் நண்பர்கள் வட்டாரத்தை அதிகளவில் உருவாக்கி வைத்துள்ள ஞானசேகர் என்கிற சசிகுமாருக்கு, நீண்ட நாட்களாக பெண் தேடி வந்தனர். சசிகுமாரின் மாமா சுப்பிரமணியன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் கரூர் வணிகவரித்துறை அலுவலகத்திற்கு யதார்த்தமாக சென்றபோது, அங்கு உதவியாளராக பணியாற்றும் சாந்தி எனும் மாற்றுத்திறனாளிக்கு மாப்பிள்ளை தேடி வருவதாக அறிந்துகொண்டு இரு வீட்டாரிடமும் பேசி, சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகளை செய்தனர்.
அந்த வகையில் இன்று பிப்ரவரி 23ஆம் தேதி வியாழக்கிழமை காலை நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் சசிகுமாரின் வீடு அருகே உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது. பின்னர், அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மணமக்களை வாழ்த்துவதற்கு காங்கிரஸ் கட்சியின் கரூர் மாவட்ட உறுப்பினர் ஸ்டீபன் பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் ஜோதி பாசு, சாமானிய மக்கள் நல கட்சியின் மாவட்டச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளும் இரு வீட்டார் உறவினர்களும் நண்பர்களும், மணமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
கடந்த 20ஆண்டுகளாக மண நாளுக்காக காத்திருந்த சசிகுமார் மற்றும் சாந்தி ஆகியோர் நமது ஈடிவி செய்திகளுக்கு சிறப்பு பேட்டி அளித்தனர். சசிகுமார் கூறுகையில், 'தனது வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாளாக கருதுகிறேன். தன்னை அம்மா ஸ்தானத்தில் இருந்து வளர்த்த தனது பாட்டி மற்றும் அத்தை, மாமா, நண்பர்கள் உதவியுடன் திருமண ஏற்பாடு நடைபெற்று இன்று சிறப்பாக திருமணம் நடைபெற்று உள்ளது.