கரூர்: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பிரதம மந்திரி மீன்வளம் மேம்பாட்டு துறை சார்பில் நாட்டின மீன் வகைகள் பெருக்க வேண்டி மீன் குஞ்சுகள் வளர்த்து, அதனை காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சி நேற்று (டிச. 27) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், அரசு அலுவலர்கள், மீனவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் 100% நிதி உதவியுடன் பிரதான் மந்திரி மத்சய சம்படா யோஜனா திட்டம் (River Ranching Programme Under PMMSY) தமிழ்நாட்டில் மேற்கொள்ள ரூ.124 லட்சம் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றார்.
இத்திட்டத்தின் மூலம் மீன் வகைகளான கட்லா, லோகு, மிர்கால் சினை மீன்கள் ஆகியவற்றை இனப்பெருக்கத்திற்காக சேகரித்து மேட்டூர் அணை, பவானிசாகர், தஞ்சாவூர் மற்றும் மணிமுத்தாறு ஆகிய அரசு மீன் குஞ்சு உற்பத்தி பண்ணைகளில் தூண்டுதல் முறையில் மீன் குஞ்சு உற்பத்தி செய்யப்படும். சுமார் 40 லட்சம் மீன் விரலிகள் தமிழ்நாட்டில் உள்ள காவிரி, பவானி, தாமிரபரணி, வைகை ஆற்றில் கிளை ஆறுகளில் இருப்பு செய்யும் திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.