கரூர்:சாதிய வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கரூர் சிந்தாமணிப்பட்டி காவல் எல்லைக்கு உட்பட்ட வீரனம்பட்டி பகுதியில் காளியம்மன் கோயிலுக்குள் பட்டியல் இனத்தவர்கள் கோயிலுக்குள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம், க.பரமத்தி காவல் நிலைக்கு உட்பட்ட காரூடையாம்பாளையம் காலனியில் பட்டியல் இனத்தவர் 3 தலைமுறைகளாகப் பயன்படுத்தி வந்த சுடுகாட்டில் புதைக்கக் கூடாது என ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத் தெரிவித்த விவகாரம் என அடுத்தடுத்து கரூர் மாவட்டத்தில் சாதிய வன்கொடுமைகள் மிகத் தீவிரமாகி வருகின்றன.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கரூர் மாவட்டம், கடவூர் தாலுகாவிற்கு உட்பட்ட செம்பியானத்தம் ஊராட்சி குருணியூர் பகுதியில் வசிக்கும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குமரவேல் என்ற இளைஞர் செலுத்திய கடனுக்கு கூடுதல் தொகை கேட்டு தர மறுத்ததால், அடித்து உதைக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் சமூக செயல்பாட்டாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள பாலவிடுதி காவல் எல்லைக்குட்பட்ட குருணியூர் பகுதியில் வசிக்கும் குமரவேல் என்ற இளைஞர் திருமணமாகி, குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில், அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் அவரது உறவினர்களான ரமேஷ், பிச்சைமணி ஆகிய இருவருடன் சேர்ந்து குமரவேலு வீட்டின் முன்பு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது தந்தை பெற்ற 1.80 லட்சம் ரூபாய் கடனுக்கு இதுவரை கட்டிய 9 லட்சம் ரூபாய் தொகை வட்டி மட்டுமே, ஆகையால் அசல் தொகையை செலுத்து அல்லது புதிய பாண்டு பத்திரத்தில் கடன் பெற்றதாக கையொப்பமிடு என மிரட்டி உள்ளார்.
இதற்கு குமரவேல் மறுக்கவே, அவரது குடும்பத்தினர் பொதுமக்கள் முன்னிலையில் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி கடுமையாக அண்ணாதுரையும் அவருடன் வந்த இருவரும் தாக்கியுள்ளனர். இதில் குமரவேலுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிகளவிலான ரத்தம் வெளியேறியுள்ளது. மேலும் அவரை கீழே தள்ளி அடித்து உதைத்து கடுமையான சொற்களால் தொடர் தாக்குதல் நடத்தவே, நிலை குலைந்து போன குமரவேல் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இன்னும் ஒரு மாத காலத்திற்குள், அசல் தொகை முழுவதையும் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் குடியிருக்கும் வீட்டை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றி விடுவோம் என விரட்டிச் சென்றுள்ளனர். இதனிடையே மயங்கிய குமரவேலுவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை பாலவிடுதி காவல்துறை வழக்கு எதுவும் பதியவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட குமரவேலுவின் சகோதரர் குழந்தைவேலு கூறுகையில், "கடவூர் அருகே உள்ள குருணியூர் பகுதியில் பிறந்து வளர்ந்து, தற்பொழுது கரூர் ராயனூரில் தங்கி டெய்லராக கரூரில் உள்ள டெக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். தனது தாய், தந்தை ஆகியோரை தனது சகோதரன் குமரவேல் பராமரித்து வருகிறார். தானும் குடும்பத்துடன் விடுமுறை நாட்களில் சென்று தனது தாய், தந்தை சகோதரன் ஆகியோரை பார்த்து வருவது வழக்கம்.