ஆர்.டி.ஐ. மனுவுக்கு ஒப்புகை சீட்டு வழங்க மறுப்பு - சமூக ஆர்வலர் ஆர்ப்பாட்டம்.. கடவூர்: கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த கோடங்கிபட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வாசுதேவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களைப் பெற, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினை நல அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
அலுவலர் சந்தியாவிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு அதற்கு ஒப்புகை சீட்டு கேட்ட போது வழங்க முடியாது எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து சமூக ஆர்வலர் வாசுதேவன் தனக்கு ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் என சுமார் 3 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதன் பின் அவருக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட மனுவிற்கான ஒப்புதல் சீட்டை அதிகாரிகள் வழங்கினர் இதுகுறித்து சமூக ஆர்வலர் வாசுதேவன், ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யோக பேட்டியில் கூறியிருப்பதாவது, "கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவிற்கு அலுவலர் ஒப்புகை சீட்டு வழங்காமல் அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.
மேலும் அலுவலகத்தை விட்டு வெளியேறாவிட்டால், தன்னை காவல்துறையை அழைத்து வெளியேற்றுவதாக மிரட்டினார். பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது என்று தெரிவித்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு ஒப்புதல் சீட்டு வழங்க மாவட்ட முழுவதும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும், அனைத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் உறுதி அளித்ததாகவும் வாசுதேவன் கூறினார்.
இதையும் படிங்க:பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!