கரூர்: வரவனை அருகே உள்ள செருப்பிலிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் சற்று மனநலன் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. சந்தோஷ் குமாரை கடந்த சனிக்கிழமை சிலர் வாயில் துணியை கட்டி, ஊது குழாய் மூலம் காலை உடைத்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட பொதுமக்கள், இளைஞரை மீட்டு கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக கடந்த மூன்று நாட்களாக சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விசாரணையில் மனநலன் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக சாட்சி கூறிய மற்றொரு இளைஞர் பாலாஜியின் கைகளையும் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான அகஸ்டின், ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், "கொடூரமான முறையில் மனநலன் பாதிக்கப்பட்ட இளைஞரை சிலர் தாக்கியதுடன் அவருக்கு ஆதரவாக காவல்துறை விசாரணையில் சாட்சி அளித்த மற்றொரு இளைஞரின் கையையும் உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மக்களுடன், போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வரை காத்திருப்போம்" என்று கூறினார்.