கரூர் மாவட்டம், வையாபுரி நகரைச் சேர்ந்தவர் கோபிநாத். மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு வந்த அவர், தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த தாந்தோணிமலை காவல் துறையினர், அவரை உடனடியாக தடுத்து நிறுத்தி அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனையும் பறித்தனர்.
கந்துவட்டி கேட்டு மிரட்டிய பாஜக இளைஞரணி செயலர் : ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி! - தற்கொலை முயற்சி
கரூர் : கந்துவட்டி கேட்டு பாஜக இளைஞரணி செயலர் மிரட்டல் விடுத்ததாகக் கூறி, ஆட்சியர் அலுவலகத்தில் நபர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது தாய் சுகுணா, கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி செயலர் கணேசமூர்த்தியிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 15 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கியதாகவும், மாதம் தோறும் வட்டி கட்டிவந்த நிலையில் கரோனாவால் கடந்த நான்கு மாதங்களாக வட்டி கொடுக்க இயலாமல் போனதாகவும், அதனைத் தொடர்ந்து கணேசமூர்த்தி, தனது தாயையும் தன்னையும் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்ததால் மன உளைச்சல் தாங்க முடியாமல் ஆட்சியர் அலுவலகத்திற்கு தற்கொலை செய்ய வந்ததாகவும் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவரை தான்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.