கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே ஜல்லிபட்டியைச் சேர்ந்தவர் பால்வண்டி ஓட்டுநர் கார்த்திக்(22). இவர் பட்டியல் இன அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகள் கோமதி(19). இவர் கரூரிலுள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தநிலையில் கடந்த ஏப்.26ஆம் தேதி இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் சென்று திருமணம் செய்து கொண்டனர்.
கலப்பு திருமணமும் கடத்தப்பட்ட புதுமண ஜோடிகளும்:இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள் வெள்ளியணை காவல்நிலையத்தில் கடந்த 27ஆம் தேதி தஞ்சமடைந்தனர். இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேசியபோது, பெண்ணின் பெற்றோர் மகளின் திருமணத்தை ஏற்க மறுத்தால் கார்த்திக் குடும்பத்துடன் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இதனிடையே ஏப் 28.ம் தேதி கார்த்திக்கின் உறவினர் வாங்கலாயி என்பவரின் ஏமூர்புதூரில் விருந்துக்கு சென்றவர்கள் அங்கேயே இரவு தங்கி உள்ளனர். நள்ளிரவில் இரண்டு கார்களில் வந்தவர்கள் கார்த்திக், கோமதி இருவரையும் வாயைப் பொத்தி தூக்கிக் கொண்டு, கடத்தி கொண்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட கலப்பு திருமண ஜோடி; 9பேர் கைது:கடத்தப்பட்ட சில மணி நேரத்தில் வெள்ளியணை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் சாதி மறுப்பு திருமணத்தை ஏற்காத கோமதியின் தந்தை கிருஷ்ணசாமி அடியாட்கள் உதவியுடன் மணமக்களை கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி கீதாஞ்சலி தலைமையில், கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் தனிப்படை போலீசார் கடத்தலில் ஈடுபட்டதாக கோமதியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி(45), தாய்மாமன் கோவிந்தராஜ்(36), அர்ஜுனன்(29), முருகேசன்(44), சண்முகம்(35), செல்வம் (எ) குப்புசாமி(46), பாலசுப்பிரமணி(36) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட என 9 பேரை போலீசார் கைது செய்தனர்.