கரூர்: கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பிச்சம்பட்டியில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி கட்டளை மேட்டுவாய்க்கால் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கும் பிரபு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
மறுநாள் காலை பிச்சம்பட்டி பகவதியம்மன் கோயில் வளாகத்தில் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை துவங்கியபோது கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் மேற்பார்வையாளர் தர்மதுரை, மணவாசியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் சிலர் திடீரென கூட்டத்திற்குள் புகுந்து, பிரபுவை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
முன்விரோதம் - கொலை
இதனால் ஆத்திரமடைந்த பிரபுவின் உறவினர்கள் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகம், வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர் தர்மதுரையின் சித்தாப்பா பொன்னுச்சாமியை கொலை செய்த வழக்கில் பிரபு உரிய சாட்சிகள் இல்லாததால் விடுதலை ஆனார். அதற்கு பழி தீர்பதற்காக தர்மதுரை, பிரபுவை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மாயனூர் காவல்துறையினர் மணவாசியைச் சேர்ந்த தர்மதுரையின் அண்ணன் ராஜதுரை, தர்மதுரை, அபிஷேக் என்கிற வேல்முருகன், கதிர்வேல் உள்ளிட்ட நான்கு பேரை நேற்று ( ஜூலை 6) ஆம் தேதி கைது செய்தனர்.