கரூர்:அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். முன்னதாக, கடந்த மே 26ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அதிகாரிகளை தடுத்து நிறுத்தி கார் கண்ணாடிகளை உடைத்து தாக்குதல் நடத்தியதாக வருமான வரித்துறை அதிகாரிகளால் கரூர் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பூபதி மற்றும் லாரன்ஸ் உள்பட திமுகவைச் சேர்ந்த 15 நபர்கள் கடந்த மே 27ஆம் தேதி கரூர் நகர காவல் துறை மற்றும் தான்தோன்றிமலை காவல் துறையினரால் கைது செய்து நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் கரூர் நீதிமன்றத்தில் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு ஜூலை 28ஆம் தேதி 15 நபர்களின் ஜாமீனை ரத்து செய்து, இந்த வழக்கு தொடர்பாக கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அனைவரும் அடுத்த மூன்று நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி இளங்கோவன் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், ஜூலை 31ஆம் தேதி கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான 15 நபர்களும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, 15 நபர்களும் கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இந்த வழக்கானது கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி ராஜலிங்கம் முன்னிலையிலான விசாரணையில் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், கைது செய்யப்பட்டு 15 நாள் காவல் முடிவடைந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த 15 நபர்கள் கரூர் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜர்படுத்தபட்டனர்.