கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை அம்மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபர், தொடங்கி வைத்தார். கரூர் கூடுதல் அமர்வு நீதிபதி சசிகலா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான சி.மோகன்ராம், கூடுதல் உரிமையியல் நீதிபதி ஏ.உமாமகேஸ்வரி, நீதித்துறை நடுவர் சரவணபாபு உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
கரூர், குளித்தலையில் நடைபெற்ற லோக் அதாலத்: ஒரே நாளில் 114 வழக்குகளுக்கு தீர்வு - லோக் அதாலத்
கரூர்: தான்தோன்றிமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், குளித்தலை நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (National Lak Adalt) நேற்று (ஏப்.10) நடைபெற்றது.
கரூர், குளித்தலையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம்
கரூரில் நடந்த முதல் அமர்வில் முதன்மை சார்பு நீதிபதி சுந்தரய்யா, வழக்கறிஞர் பி.கே.வைத்தீஸ்வரன், இரண்டாவது அமர்வில் கூடுதல் சார்பு நீதிபதி பாரதி, வழக்கறிஞர் ஏ.பாலக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் நேற்று (ஏப்.10) ஒரே நாளில் கரூர், குளித்தலை ஆகிய இடங்களில் நடந்த நான்கு அமர்வுகளில் மோட்டார் வாகன வழக்குகள் 71, சிவில் வழக்குகள் 29, குடும்ப நல வழக்குகள் ஆறு, வங்கி வழக்குகள் ஐந்து, காசோலை மோசடி வழக்குகள் இரண்டு, தொழிலாளர் நல வழக்கு ஒன்று என மொத்தம் 114 வழக்குகளில் நான்கு கோடியே 75 லட்சத்து ஆறாயிரத்து 895 ரூபாய் தீருதவியாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும் சார்பு நீதிபதியுமான சி.மோகன்ராம், ”நாடு முழுவதும் மக்கள் எளிமையாக நீதிமன்றத்தில் தங்களது பிரச்னைகளையும் தங்களுக்கு சேரவேண்டிய நிதி சம்பந்தமான நிலுவையில் உள்ள வழக்குகளையும் குறித்து இருதரப்பினருர் மத்தியில் சமரசத்தோடு தீர்வு காண்பதற்காக மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முதல் மக்கள் நீதிமன்றம் தற்போது நடைபெறுகிறது ஒவ்வொரு ஆண்டும் நான்கு முறை தேசிய மக்கள் நீதிமன்றம் கூடவுள்ளது.
அதன்படி அடுத்த அமர்வு ஜூலை மாதம் 7ஆம் தேதியும், மூன்றாவது அமர்வு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. அதேபோல் இந்த ஆண்டுக்கான நான்காவது இறுதி அமர்வு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், ஏற்கனவே நிலுவையுள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு நீதிமன்றக் கட்டணங்கள் திரும்ப வழங்கப்படும். இங்கு தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு இல்லை. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.