இருசக்கர வாகனங்களில் கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற இளைஞர்கள் கைது - கஞ்சா பறிமுதல்
கன்னியாகுமரி: இருசக்கர வாகனங்களில் கேரளாவிற்கு கஞ்சா கடத்த இளைஞர்களை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியல் காவல் துறையினருக்கு கேரளாவிற்கு கஞ்சா கடத்த இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து தமிழ்நாடு - கேரள எல்லை மலையோர பகுதியான களியல் - நெட்டா சோதனைச் சாவடியில் அருகே காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு இளைஞர்கள் காவல் துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்தனர்.
காவல்துறையினரும் அவர்களை விரட்டிப் பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் மூட்டைகளில் பதுக்கிவைத்திருந்த நாற்பது கிலோ கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டது. மேலும் 6 இளைஞர்களையும் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் விபின், ஷைன் ஜோஸ், விசாக், ஜிஸ்ணுராஜ் ஆகியோர் கேரளாவை சார்ந்தவர்கள் என்றும் பெர்ஜின், பெர்லின் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் அனைவரும் ஊரடங்கு நேரத்தில் மது கிடைக்காததால் கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகி அதையே தொழிலாகத் தொடர்ந்ததும் தெரியவந்துள்ளது. காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.