கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் நகரை அடுத்த இரணியல் ஆர்.சி.தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜாண். இவரது மகன் சுஜித் (28). இவருக்கு திருமணமாகவில்லை. இவர், திங்கள் நகர் மார்க்கெட்டில் மீன் வியாபரம் செய்து வந்தார். சுஜித் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ஸ்டெபின் (19 ).
இருவரும் இரு சக்கர வாகனத்தில் சுஜித்தின் செல்போனை சரிசெய்ய திங்கள் நகர் சென்றனர். அப்போது சுஜித் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. அதில் திங்கள் நகர், பெரியாபள்ளி பகுதியைச் சேர்த்த நாராயணன் மகன் சுரேஷ் (எ) லாரி சுரேஷ் என்பவர் பேசியதாகவும், அவர் சுஜித்திடம் பேசுவதற்காக மேலமாங்குழி குளத்தின் அருகில் வா எனக்கூறி அழைத்ததாகத் தெரிகிறது. உடனே சுஜித், ஸ்டெபின் இருவரும் இருசக்கர வாகனத்தில், அப்பகுதிக்குச் சென்றனர்.
அங்கு சுரேஷ் மற்றும் அவரது நண்பர் நடுத்தேரி ஆற்றின்கரையைச் சேர்ந்த ராபி (எ) விமல் ஆகிய இருவரும் நின்றிருந்தனர். திடீரென இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுஜித்தின் மார்பு, வயிறு பகுதிகளில் குத்தியதில், சம்பவ இடத்திலேயே சுஜித் உயிரிழந்தார்.