கன்னியாகுமரி:கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்ஞாறமூடு அருகே உள்ள புல்லம்பாற அஞ்சாம்கல் பகுதியை சேர்ந்தவர் அனஸ் ஹஜாஸ்(30). ஸ்கேட்டிங் சாகசம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், புதிதாக சாதிக்க எண்ணி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் போர்டில் சாகச பயணம் மேற்கொள்ள தீர்மானித்தார்.
கடந்த மே மாதம் 29ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தனது சாகச பயணத்தை தொடங்கினார். கன்னியாகுமரியில் இருந்து மதுரை, பெங்களூர், ஹைதராபாத் வழியாக பயணித்தார். மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் தாண்டி ஹரியானா மாநிலத்தை அடைந்துள்ளதாகவும், இன்னும் சுமார் 15 நாட்களில் காஷ்மீர் சென்று தனது சாகச பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாகவும் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் ஓவ்வொரு முக்கிய பாயிண்ட்களை கடக்கும்போதும் ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவிட்டும் வந்தார்.
இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி சாலை விபத்தில் அனாஸ் உயிரிழந்துள்ளார். அனஸ் ஹஜாசின் மொபைல் போனில் அழைத்த அவரது நண்பரிடம் விபத்து நடந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் பஞ்சகுலா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது லாரி மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தும் காப்பாற்ற முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.