கன்னியாகுமரி: நாகர்கோவில் அடுத்த தேரை கால் புதூர் பகுதியை சேர்ந்தவர் தனிஷ் - சைனி ஆகிய தம்பதிகளுக்கு இரண்டாவதாக, மூன்று வயது ஆண் குழந்தை உள்ளது. சில தினங்களுக்கு முன்பு, காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதால், உடனே நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு மருத்துவரின் பரிந்துரையை ஏற்று குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில், அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.
அப்போது, தவறுதலாக வெறி நாய்க்கடிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தை உடம்பில் எந்த ஒரு காயமும் இல்லாததால் பெற்றோரும், இதனை உறுதிப்படுத்த முடியாமல் இருந்தனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இது வெறி நாய்க்கடிக்கான அறிகுறிகள் தான் என உறுதி அளித்து, குழந்தைக்கு மேல் சிகிச்சை தேவைப்படுவதால், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் எந்த பரிசோதனைகளும் மேற்கொள்ளாமல் ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் அளித்த அறிக்கையின்படி, வெறி நாய்க்கடிக்கான மருத்துவத்தை ஆரம்பித்துள்ளனர். மேலும், குழந்தையின் உடல் மோசமாக இருந்ததால் உடனே நேரடியாக தனிமைப்படுத்தி வெறி நாய்க்கடிக்கான தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தை பிழைப்பது கடினம் என்றும் ஒரு கட்டத்தில் குழந்தை இறந்துவிட்டதாகவும், மருத்துவர்கள் மாறி மாறி தகவல் தெரிவித்ததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் குழந்தையை பெற்றோர் பார்த்தபோது உடலில் அசைவு இருந்துள்ளது. பின்னர் குழந்தையை கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.