கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள்துறை சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் விழா நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வட நேரே தொடங்கிவைத்தார். பின்னர், மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்த அவர், அவர்களுக்குள் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் முன்பு பேசிய அவர், ஐக்கிய நாடுகள் சபை உலகம் முழுவதும் டிசம்பர் 3ஆம் தேதியை உலக மாற்றுத்திறனாளிகள் நாளாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மூன்றாம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் உலக மாற்றுத்திறனாளிகள் நாளை அரசு சார்பாக கொண்டாட இயலவில்லை. எனவே, இன்று உலக மாற்றுத்திறனாளிகள் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அரசின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள அட்டையினை பெறுவதற்கு பஞ்சாயத்து அளவில் முகாம்கள் நடத்தப்படுகிறது.