கன்னியாகுமரி மாவட்டத்தில், கரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்கவும், அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துச் செல்லவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், குமரியில் முகக் கவசத்திற்கு அதிகதேவை ஏற்பட்டுள்ளது.
மேலகிருஷ்ணன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி. தையல் தொழிலாளியான இவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், ஸ்ரீதேவி தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஸ்ரீதேவி முகக் கவசம் வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார்.
ஆனால், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. முகக் கவசம் வைத்திருப்பவர்களும் அதிகவிலை கூறியதால் அதிர்ச்சியடைந்த அவர் வீடு திரும்பினார். பின்னர் தனது வீட்டில் இருந்த புதுத் துணிகளை பயன்படுத்தி முகக்கவசம் தயாரித்து தனது குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார். இதையடுத்து, அதனை வாங்க முடியாத ஏழைகளின் நலனை கருத்தில் கொண்டு முகக் கவசங்களை தயார் செய்து ஏழைகளுக்கு இலவசமாக வழங்கிவருகிறார்.
முகக்கவசங்களை தயார் செய்யும் ஸ்ரீ தேவி தற்போது இவர் தினமும் 100 பேருக்கு இலவசமாக முகக் கவசங்களை தயாரித்து வழங்கிவருகிறார். தான், தனது குழந்தைகள் மட்டும் நலமுடன் வாழவேண்டும் என்று எண்ணாமல் பொதுநலத்தோடு இலவசமாக முகக் கவசங்களை வழங்கி வரும் ஸ்ரீதேவியின் செயலைக் கண்டு பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னை ஐஐடி தயாரித்துள்ள ’3டி’ முகக் கவசம்!