கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கரிய மாணிக்கபுரம் பகுதியில் வள்ளியூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரசி என்கின்ற ரஜினிகுமார் கடந்த ஜூன் 6ஆம் தேதி எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
அவரை காதலித்து வந்த கன்னியாகுமரி பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவந்த அனுஷா (27 ) என்பவரின் சகோதரன் கேதீஸ்வரனை கொலை சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாக காவல் துறையினர் கைது செய்தனர்.
காதலன் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தீக்குளிப்பு! உடல் எரிந்து கொலை செய்யப்பட்ட காதலனின் புகைப்படத்தை பார்த்த அனுஷா அதிர்ச்சியுற்று வீட்டில் தனிமையில் இருக்கும்பொது, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்துக் கொண்டார். அவரின் அலரல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உடலில் 70 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அனுஷா சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.