இன்றைய சூழலில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை எட்டியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செய்தித்தாள்களிலோ, அல்லது ஊடக வாயிலாக போலி மருத்துவர்கள் கைது, போலி மருத்துவர்களால் உயிரிழப்பு போன்ற செய்திகளை கடந்து செல்கிறோம்.
பயிற்சி பெற்ற மருத்துவர்களே கவனக்குறைவால் கண் அறுவை சிகிச்சைக்கு, காலில் கட்டு போடுவதும், காலில் குறையோடு போனால் வயிற்றை கிழித்து பதம் பார்க்கும் நிலையும் நீடித்து வருவதை கேளிக்கையாக படங்களில் பார்த்து ரசிப்பது உண்டு. ஆனால், சிலர் மருத்துவம் படிக்காமலேயே டாக்டர் என கூறிக்கொண்டு சிகிச்சையளிப்பதால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கிறது.
எங்கோ சில மருத்துவர்களிடம் உதவியாளராக இருப்பது, கிளினிக்கில் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து சிலர் மருத்துவர் என கூறிக்கொண்டு மக்களை அணுகுவார்கள். மக்களும் அவரை நம்பி உயிரை பறிகொடுக்கும் பரிதாப நிகழ்வுகளும் ஏராளம். அந்தவகையில் கன்னியாகுமரியில் 49 வயதுள்ள பெண் ஒருவர் சாதாரண காய்ச்சலுக்காக மருத்துவம் பார்க்க சென்று கண்ணை இழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோவில்விளை பகுதியைச் சேர்ந்தவர் ரெஜிலா பாக்கியஜோதி (49). இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவதற்காக தெங்கம்புதூர் பகுதியில் அமைந்துள்ள ரதீஷ் என்பவரின் (எஸ்.ஆர்.எம்.) மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ரதீஷ் என்பவர் அப்பெண்ணிற்கு சுமார் 20 நாள்கள் சிகிச்சை அளித்துள்ளார்.
தவறான சிகிச்சை காரணமாக உடல்நிலை மோசமானதுடன் கண்கள் இரண்டும் வீங்கிய நிலையில் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. மனைவியின் நிலையை பார்த்து அச்சமடைந்த கணவர், அவருக்கு சிகிச்சையளித்த ரதீஷிடம் கேள்வி எழுப்பியதற்கு அவர் உரிய பதில் அளிக்கவில்லை. மனைவியின் உடல்நிலையை கண்டு மனம் நொந்துபோன கணவர் நபர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளார்.
அங்கு ரெஜிலா பாக்கியஜோதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தவறான சிகிச்சை அளித்ததன் மூலம் பார்வை பறிபோயுள்ளது என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அதிநவீன மருத்துவ வசதிகள் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அவர்களது பரிந்துரையின்பேரில் கண் பார்வையிழந்த தனது மனைவியை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரது கணவர் அழைத்து சென்றார்.
பார்வை இழந்து வீங்கியிருந்த ஒரு கண் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது. மற்றொரு கண் பார்வை இழந்த அப்பெண் ஒரு நடைபிணமாக வாழ்ந்து வருகிறார்.
போலி மருத்துவரால் பார்வையை இழந்த பெண் இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர் ஒருவர் பேசுகையில், ”வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்கள் நமது நாட்டில் மருத்துவம் பார்க்க வேண்டுமென்றால் தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இங்கு மருத்துவம் செய்ய முடியும். ஆனால் சிலர் அந்த தேர்வு எழுதாமலேயே மருத்துவம் செய்ய தொடங்கி விடுகின்றனர். அதில் சிலரது மனைவி மருத்துவராக இருப்பார். அவர் பெயரில் மருத்துவமனையை பதிவு செய்துவிட்டு கணவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பார். இதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு நிரந்தர தீர்வைக் காண வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:மௌனத்தால் உலகை வென்ற ரமணர் - ரமணரின் ஜெயந்தி விழாவில் இசைஞானி ஆராதனை