கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் மாவட்ட சுற்றுலாத் துறையும் இணைந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்முறையாக காற்றாடி திருவிழா நடைபெற்று வருகிறது. இதை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களைச் சேர்ந்த குழுவினர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை சுற்றுலாப் பயணிகள் பார்க்க விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடியிலான கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதைப் போன்று பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி, சொத்த விளை, சங்கு துறை பீச் போன்ற பகுதிகளில் தமிழ்நாடு சர்வதேச பட்டத்திருவிழா-2023 என்ற தலைப்பில் பிரமாண்டமான காற்றாடிகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:பாதியில் நிற்கும் பாதயாத்திரை.. அண்ணாமலை நாளை டெல்லிக்கு திடீர் பயணம்.. காரணம் என்ன..?
இந்த காற்றாடி திருவிழாவில் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களைச் சேர்ந்த காற்றாடி இயக்குபவர்கள் பல வண்ண காற்றாடிகளை பறக்கவிட்டு வருகின்றனர். முதலில் 'வாழ்க தமிழ்' என்ற வாசகத்துடனான காற்றாடி பறக்க விடப்பட்டது. அதன்பிறகு, நமது நாட்டின் தேசியக் கொடியின் மூவர்ண நிறத்திலான பலூன் பறக்க விடப்பட்டது.
தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட காற்றாடிகள் பறக்கவிடப்பட்டன. புலி உருவங்களுடன் கூடிய காற்றாடி, கார்ட்டூன் தொடர்களில் வரும் ஸ்பான்ஜ் பாப் உருவ காற்றாடி, சோட்டா பீம், டோலு - போலு , சுட்கி, பாலகணேசா, யானை, அசோக சக்கர வடிவிலான காற்றாடி எனப் பலவிதமான காற்றாடிகள் வானில் பறக்கவிடப்பட்டன. இதனை சுற்றுலாப் பயணிகளும் மாணவ-மாணவிகளும் கண்டு ரசித்தனர்.
இந்த காற்றாடி திருவிழாவில் வடமாநிலங்களில் இருந்து 3 குழுவினரும், மலேசியா நாட்டைச் சேர்ந்த 1 குழுவினர், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 2 குழுவினர் என மொத்தம் 6 குழுவினர் காற்றாடித் திருவிழாவில் கலந்துகொண்டு காற்றாடிகளை பறக்கவிட்டு வருகின்றனர்.