தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 29, 2021, 8:04 AM IST

ETV Bharat / state

வில்சன் கொலை வழக்கு: குற்றவாளியைக் காவலில் எடுத்து விசாரிக்க மனு!

கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த வில்சன் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுள் ஒருவரான சியாபுதீனை, காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

வில்சன் கொலை வழக்கு
வில்சன் கொலை வழக்கு

கன்னியாகுமரி: களியக்காவிளைப் பகுதியில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக களியக்காவிளை காவல் துறையினர், கியூ பிரிவு காவல் துறையினர் இருவேறு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அம்பத்தூர் இந்து முன்னணிப் பிரமுகர் கொலை, ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்தது ஆகிய வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி பின் தலைமறைவான தீவிரவாதி காஜாமைதீன், நவாஸ், அப்துல் சமீம், தவ்ஃபீக் ஆகியோர் இதன் பின்னணியில் இருந்தது தெரிந்தது.

பயங்கரவாதிகள் கைது:

மேலும், ஜிகாதி பயங்கரவாதிகள் அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து கேரளா தப்பிச்செல்லும்போது களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த வில்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதும் தெரியவந்தது. இதனிடையே பயங்கரவாதி காஜா மைதீனுக்கு உதவியதாக 10-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு கியூ பிரிவு காவல் துறையினரால், பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

மேலும், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனைக் கொன்ற அப்துல் சமீம், தவ்ஃபீக் ஆகியோரும் பெங்களூருவில் பதுங்கியிருந்த நிலையில், பெங்களூரு சிறப்புப்படை காவல் துறையினரால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில் டெல்லியில் பதுங்கியிருந்த காஜா மைதீன், நவாஸ் உள்ளிட்ட மூன்று பேரை டெல்லி சிறப்புப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

தேசிய புலனாய்வு முகமை விசாரணை:

அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தொடர பயங்கரவாத தொடர்பு இருப்பதன் காரணமாக கியூ பிரிவு காவல் துறைப் பதிவு செய்த வழக்கையும், களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொல்லப்பட்ட வழக்கையும் தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து இவ்விரு வழக்குகளும் ஒரே வழக்காக மாற்றப்பட்டு கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தேசியப் புலனாய்வு முகமை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி இவ்வழக்கில் பயங்கரவாதிகளான காஜா மைதீன், அப்துல் சமீம், தவ்ஃபீக் ஆகியோருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை தேசிய புலனாய்வு முகமை காவல் துறையினரால் பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பயங்கரவாதி சிறையில் அடைப்பு:

மேலும், கன்னியாகுமரி சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பயங்கரவாதிகள் அப்துல் சமீம் , தவ்ஃபீக் ஆகியோருக்குத் துப்பாக்கி வாங்கிக் கொடுத்ததாகவும், பயங்கரவாதிகளான காஜா மைதீன், மகபூப் பாஷா, இஜாஸ் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதாகவும் சியாபுதீன் என்ற காலித் (40) என்பவர் தேசிய புலனாய்வு முகமையால் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி கத்தார் நாட்டிலிருந்து சென்னை வந்த சியாபுதீனை குடியுரிமை அலுவலர்களின் உதவியுடன் தேசியப் புலனாய்வு முகமை அலுவலர்கள் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் ஏற்கெனவே இந்தியாவில் இயங்கி வரும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான "சிமி"-யில் அவர் மிகத் தீவிரமாக இயங்கி வருவதும், கோவை மாவட்டம் போடனூரைச் சேர்ந்த சியாபுதீன் கடந்த ஜனவரி மாதமே கத்தாருக்குச் சென்றுவிட்டதும் தெரியவந்தது.

பின்னர் அவர் பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

காவலில் எடுத்து விசாரிக்க மனு:

இந்நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கின் குற்றவாளிகளுள் ஒருவரான சியாபுதீனை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 28) மனுதாக்கல் செய்துள்ளனர்.

மேலும், இன்று (ஜூன் 29) சியாபுதீனை பெங்களூரு மத்திய சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

இதையும் படிங்க:வில்சன் கொலை வழக்கு: ஆறு பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ABOUT THE AUTHOR

...view details