கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் (வயது 88). இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மாநில முதுநிலை கணக்கு அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருடைய மனைவி மேரி செல்லம்மாள் (வயது 88), ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை ஆவார். இவர்களுக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். ஒரு மகன் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்றில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். மற்ற இரண்டு மகன்களும் தனியார் நிறுவன ஊழியர்களாக உள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு மருத்துவராகப் பணியாற்றி வந்த இவர்களது மகன், காரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் மகனை இழந்த வேதனையில் ஆல்பர்ட்டும், செல்லம்மாளும் வாடி வந்தனர்.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று (ஆக. 26) காலை ஆல்பர்ட் உயிரிழந்தார். தனது மகன் இழப்பில் வாடியிருந்த செல்லம்மாளை, கணவரது மரனமும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து அவர்களது மகன்கள், மகள்கள், உறவினர்கள் இணைந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.