கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள், ஈரான் நாட்டு அரேபிய முதலாளியிடம் ஒப்பந்தப் பணியாளராக இருந்து மீன் பிடிப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஈரான் நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் மீனவ மக்களுக்கு வைரஸ் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஆனால், மீன் பிடிப்பதற்கு அரேபிய முதலாளி தொடர்ந்து வற்புறுத்திவரும் நிலையில், தங்களை மீட்கும்படி சமீபத்தில், வாட்ஸ்அப் மூலம் மீனவர்கள் காணொலி ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அந்த காணொலியைத் தொடர்ந்து, நெய்தல் எழுச்சி பேரவையினரும் மீனவ குடும்பத்தினரும் அவர்களை மீட்குமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர். இந்நிலையில், தற்போது அங்கு சிக்கித் தவிக்கும் மீனவர்கள் இரண்டாவது காணொலியைப் பதிவிட்டுள்ளனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, "இங்கு தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் எங்களை நாங்கள் தற்காத்துக் கொள்வதற்கு முடிந்த அளவு பாடுபடுகிறோம். இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்தியா தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் எங்களுக்கு பாதிப்பு உண்டாகும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.