குமரி மாவட்டம் குளங்கள் அதிகம் நிரம்பிய மாவட்டம் என அறியப்படுகிறது. மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் மட்டும் 2,040 குளங்கள் உள்ளன.
இந்தக் குளங்களுக்கு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து நாஞ்சில்நாடு புத்தனார் கால்வாய், தோவாளை கால்வாய், வாரியூர் கிளை கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கால்வாய்கள் மூலம் நீர்வரத்து வருகிறது.
இவ்வாறு கால்வாய்கள் மூலம் வரும் நீர், குளங்களை நிரப்பிய பிறகு கடைமடைப் பகுதியான குமரி மாவட்டத்தின் மணக்குடி, வட்டக்கோட்டை பகுதியிலுள்ள கடலில் கலக்கிறது. இவ்வாறு அணையிலிருந்து கால்வாய் வழியாக வரும் தண்ணீர் மற்றும் குளங்களில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல், வாழை, மரவள்ளி உள்ளிட்ட விவசாயம் நடைபெறுகிறது.
அதேபோல மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் முறையாக தூர்வாரப்பட்டு பராமரிக்கப்படாமல் உள்ளதால், குளங்களில் போதுமான தண்ணீரை தேக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கால்வாய்கள் மூலம் கிடைக்கும் ஆயிரக்கணக்கான டிஎம்சி தண்ணீர் போதுமான அளவில் குளங்களில் தேங்காமல் வீணாக கடலில் கலந்துவருகிறது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன் கூறுகையில், "பேச்சிப்பாறை அணையிலிருந்து நாஞ்சில்நாடு, புத்தனார் கால்வாய் வழியாக வரும் தண்ணீர் மயிலாடி, அச்சங்குளம், கொட்டாரம் வழியாக பல குளங்களை நிரப்பி அதன் இறுதி குளமான வாரியூர் புதுகுளத்தை வந்தடைகிறது.
இந்தக் குளம் நிரம்பி இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் வட்டக்கோட்டை கடலில் கலக்கிறது. ஆனால் புதுக்குளம் முறையாகத் தூர்வாரப்படாமல், புல் பூண்டு முளைத்து காணப்படுவதால் குளத்தில் முழுமையாக தண்ணீர் தேங்குவதில்லை.
இதனால் ஏராளமான டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துவருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் புதுக்குளம் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் தூர்வாரப்படாமல் உள்ள குளங்களைக் கண்டறிந்து அதனைத் தூர்வாரி முழுக் கொள்ளளவு தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
வாழை விவசாயியான ஆறுமுகம் கூறுகையில், "குளங்கள் முறையாகத் தூர்வாரப்படாததால் பல்லாயிரக்கணக்கான டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலந்துவருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் குளங்களைத் தூர்வாரி முறையாகப் பராமரித்தால், கோடை காலத்தில்கூட குமரி மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. மேலும், கோடையிலும் இந்தத் தண்ணீரை விவசாயம் செய்யவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த முடியும்" எனத் தெரிவித்தார்.
குளங்கள் தூர்வாரப்படாததால் கடலில் வீணாகும் தண்ணீர் இது குறித்து பொதுப்பணித் துறை அலுவலர் ஒருவர், "குமரி மாவட்டத்தில் 2,040 குளங்கள் உள்ளன. இதில் குடிமராமத்துப் பணி திட்டத்தின்கீழ் சுமார் 55-க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மேலும் குளங்களில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட வகையிலும் சுமார் 200 சிறிய குளங்கள் முழுமையாகவும், 150 குளங்கள் பகுதியாகவும், 300 குளங்கள் குறைந்த அளவிலும் தூர்வாரப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தற்போது பெரும்பாலான குளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், குளங்களைத் தூர்வாருவது சாத்தியமில்லாதது. எனவே வரும் கோடை காலத்தில் அல்லது குளங்கள் நீர் வற்றும்போது மீண்டும் குடிமராமத்துப் பணிகள் தொடர நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.
இருப்பினும், ஆண்டுதோறும் குளங்களை முறையாக தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றும், இதன் பின்னரும் உபரியாக வரும் தண்ணீரை கால்வாய்கள் மூலம் ராதாபுரம் பகுதி மக்களுக்கு பயன் அடையும் வகையில் தண்ணீர் திறக்க வேண்டுமென்பதும் அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க:அன்று குடிநீர் ஆதாரம்... இன்று முட்புதர்களின் கூடாரம் - சேலம் பனமரத்துப்பட்டி ஏரிக்கு எப்போது கிடைக்கும் விடிவுகாலம்!