சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் பகவதி அம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி, வைகாசி மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் வைகாசி விசாக திருவிழாவின் பத்தாம் நாள் அன்று இரவு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள தெப்பக்குளம் வடக்குரத வீதியில் சுமார் 25 அடி ஆழத்தில் உள்ளது.
இந்த தெப்பக்குளத்திற்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து என்.பி கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு பாபநாசம் கிளை கால்வாய் வழியாக தண்ணீர் நிரப்பப்படுகிறது. மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாயின் ஆரம்பத்திலிருந்து சர்ச் ரோடு வரை உள்ள பகுதி திறந்த வெளியாகவும் மீதம் உள்ள கால்வாய் பகுதி பூமிக்கு அடியில் ராட்சத குழாய் பதித்தும் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது கால்வாயின் ஆரம்பப் பகுதி புதர்மண்டிக் கிடப்பதால் தெப்பக்குளத்திற்கு சில ஆண்டுகளாக தண்ணீர் கொண்டுவருவதில் சிக்கல் இருந்துவருகிறது. இதனால் எப்போதும் தெப்பக்குளம் வறண்டே காட்சியளிக்கிறது.