கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றும் பல்வேறு இடங்களில் சூறை காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்தன. மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
'மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்..!' - குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை
கன்னியாகுமரி: மேற்கு மத்திய அரபிக் கடலில் 24ஆம் தேதி வரை பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்திய கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழ்நாட்டின் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் 3.7மீ முதல் 4.3மீ உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. 22ஆம் தேதி வரை இந்த நிலை தொடரும் என்பதோடு, மேற்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் 24ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மேற்கு மத்திய அரபிக் கடல் பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.