கன்னியாகுமரி: நாகர்கோயில் மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு பேருந்து பணிமனையில் தொலைதூரபேருந்து ஓட்டுநராக பணிபுரிந்துவரும் கோலப்பன் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தான் செல்லும் வழித்தடங்களில் இயக்கவே தகுதி இல்லாத பேருந்துகளை இயக்குமாறு அதிகாரிகள் நிர்பந்தம் செய்வதாகவும், இதனால் பயணிகளிடம் மோதல் போக்கு நீடிப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இதேபோன்று நாகர்கோவில் ராணித்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூன்றாவது பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வரும் ஷிபு என்பவர் தனது வேதனையை வெளிப்படுத்தும் விதமாக வெளியிட்ட வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வீடியோவில் ஷிபு பேசுகையில், "நாகர்கோயில்-அருமனை இடையே இயங்கிவரும் எண் 318 பேருந்தில் பணியாற்றி வருகிறேன். இந்த வழித்தடத்தில் பிரேக் இல்லாத பேருந்தை அதிகாரிகள் எங்களுக்கு வழங்கினர். மிகவும் சிரமப்பட்டு ஒருமுறை ஒட்டிய பின்பு கிளை மேலாளருக்கு பேருந்தின் நிலைமை குறித்து தகவல் கொடுத்தோம். இருப்பினும் அதே பேருந்தையே ஓட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர்.
இதனால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். குறிப்பாக எங்களால் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் ஏற்படும்" என்று கூறுகிறார். இதேபோன்று நேற்று அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், தான் பணிபுரிந்த பழுதான பேருந்து தொடர்பாகவும் அதிகாரிகளின் அலட்சியம் தொடர்பாகவும் கண்ணீர் மல்க பேசி வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோக்கள் போக்குவரத்து ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க:துப்பாக்கி சுடுதலில் தங்கம் அள்ளிய அஜித்!