உலகளாவிய அச்சுறுத்தலாக மாறி இருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வருகிறது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், அதன் தாக்கம் தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டத்தை அடைந்திருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் பெருந்தொற்றால் 1204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று நோய் அறிகுறி தென்பட்டவர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிப்பை தடுக்க பல்வேறு பகுதிகள் சீல் வைக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மணிக்கட்டிபொட்டல், அனந்தசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த கிராமங்கள் முற்றிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் வெளி நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களும் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் கரோனா வைரஸ் தொற்று கண்டறிதல் பரிசோதனை நடந்து வருகிறது.