கன்னியாகுமரி: நவராத்திரி விழாவின் கடைசி மற்றும் பத்தாம் நாள் விழாவான இன்று (அக்.24) விஜயதசமி கொண்டாடப்படுகிறது. விஜயதசமி குழந்தைகளுக்கு முதல் முதலாகக் கல்வி தொடங்கும் நாளாகக் கருதப்படுகிறது. இதனை ஏடு தொடங்கும் வித்யாரம்பம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஆண்டு தோறும் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.
விஜயதசமி தினத்தன்று சரஸ்வதி கோவில் உள்ளிட்ட தேவி கோயில்களில் ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மங்களகரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (அக்.24) விஜயதசமி விழா கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சரஸ்வதி உள்ளிட்ட அம்மன் கோயில்களில் கொண்டாடப்பட்டு
வருகிறது.
கன்னியாகுமரி, நாகர்கோவிலில் பார்வதிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வன மாளீஸ்வரா கோயிலில் உள்ள சரஸ்வதி சன்னிதானத்தில் கோவில் குருக்கள் குழந்தைகளின் நாவில் தங்க ஊசியால் எழுதியும், குழந்தைகளின் கை விரல்களைப் பிடித்துக் கொண்டு பச்சரிசியில் அகர முதல எழுத்துகளை எழுதச் செய்து, குழந்தைகளின் கல்வியைத் தொடங்கி வைத்தனர்.