கன்னியாகுமரி: இலவச பாட புத்தகங்களை முன்னுரிமை அடிப்படையில் அரசு பள்ளிகளுக்கு வழங்காமல், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு கமிஷன் அடிப்படையில் குமரி மாவட்ட குளச்சல் வட்டார கல்வி அலுவலகர் விற்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையொட்டி நேற்று மாலை 4 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான காவலர்கள் குளச்சல் வட்டார கல்வி அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத 54,060 ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர். மேலும், அங்கிருந்த ஒப்பந்த ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இவ்விசாரணையைத் தொடர்ந்து, வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.