கன்னியாகுமரி:நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு வரும் பத்தாவது நாள் விஜயதசமி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளன்று தொடங்கப்படும் அனைத்து செயல்களும் சிறந்த வெற்றியினைத் தரும் என்பது மக்களின் நம்பிக்கை.
குமரியில் எளிமையாக நடைபெற்ற வித்யாரம்பம் - விஜயதசமி கொண்டாட்டம்
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மிக எளிமையான முறையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
விஜயதசமியன்று குழந்தைகளுக்கு புதிய கலைகளான பாட்டு, இசைக்கருவிகள் பயிற்றுவித்தல், நடனம், ஓவியம் போன்றவற்றை கற்பிக்கவும், பள்ளிகளில் சேர்க்கவும் பலர் ஆர்வம் காட்டுவர். குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சியும் இதில் ஒன்று. பத்மநாபபுரம், நாகர்கோயில், குழித்துறை உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பெற்றோர் தங்களது குழந்தைகளை அரிசியில் அ என்ற எழுத்தை எழுதவைத்து, கற்றல் பயிற்சியை தொடங்கி வைத்தனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக சமூக இடைவெளியுடன் குழந்தைகளும் பெற்றோரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். குறைவான அளவிலேயே மக்கள் இன்றைய தினம் கோயிலுக்கு வந்திருந்தனர்.