கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியில் அமைந்துள்ள கனக மூலம் சந்தையில் காய்கறிக் கடைகள் மிக நெருக்கமாக உள்ளன. இதனால், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு கரோனா பரவும் இடர் நிலவியது.
இதனைக் கருத்தில்கொண்டு வடசேரி பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சார்பில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது. இதில் வியாபாரிகள் தனிநபர் இடைவெளி விட்டு காய்கறிக் கடைகள் அமைத்து பொதுமக்களிடம் காய்கறி வியாபாரம் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் கரோனா தடை உத்தரவைப் பயன்படுத்தி வியாபாரிகள் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பதாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயம்செய்த விலைக்குதான் காய்கறிகளை விற்பனைசெய்ய வேண்டும் என்று வியாபாரிகளுக்கு உத்தரவிட்டது.