மன்னர் காலத்தில் கடல் பகுதிகளைக் கண்காணிக்க குமரி கடற்கரைப் பகுதியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராணுவத் தளமான வட்டக்கோட்டை பகுதி தற்போது சுற்றுலாத் தலமாக செயல்பட்டுவருகிறது. போதிய பராமரிப்பின்றி பொலிவிழந்து காணப்படும் இந்தக் கோட்டைக்கு தற்போது சுற்றுலாப் பயணிகளின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு மிக அருகில் வட்டக்கோட்டை என்ற பழங்காலத்து கடல் கோட்டை அமைந்துள்ளது. 18ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட இந்த வட்டக்கோட்டை கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. எதிரி நாட்டிலிருந்து கடல் வழியாக படையெடுத்து வரும் கப்பல்களைக் கண்காணிப்பதற்காகவும் கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்தக் கோட்டைக் கட்டப்பட்டது.
பொலிவிழந்து காணப்படும் வட்டக்கோட்டை இந்தக் கோட்டை பிற்காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் வந்து தங்கிச் செல்லும் இடமாகவும் ராணுவ வீரர்கள் தங்கி கடலைக் கண்காணிப்பதற்கான கோட்டை கொத்தளமாகவும் இந்த வட்டக்கோட்டை இருந்துவந்தது.
இந்தியாவில் மன்னர்கள் ஆட்சி முடிவுக்கு வந்ததும் ராணுவத் தளமாக இருந்த இந்தக் கோட்டை மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தக் கோட்டையின் மீது ஏறி நின்று பார்த்தால் குமரி கடலில் பெரும் பகுதியைப் பார்க்க முடியும். இதனால் இந்தப் பகுதி சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் சர்வதேச சுற்றுலாத் தலமாக உள்ளதால் அங்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வட்டக்கோட்டை சென்று பார்வையிட்டுவருகின்றனர். ஏராளமான மக்களைக் கவர்ந்துவந்த வட்டக்கோட்டை, தற்போது அதன் பொலிவை இழந்து காணப்படுகிறது.
சுற்றுலாத் தலமான வட்டக்கோட்டை போதிய பராமரிப்பின்றி காணப்படுவதாலும் கோட்டையின் அருகே மாநில அரசின் சுற்றுலாத் துறையால் உருவாக்கப்பட்ட பயணியர் விடுதி, சிறுவர் பூங்கா போன்றவை பல ஆண்டுகளாக செயல்படாமல் புதர் மண்டிக் கிடப்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது.
இது குறித்து சுற்றுலாப் பயணிகளிடம் பேசுகையில், "வரலாற்று சிறப்புமிக்க வட்டக்கோட்டையின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. கோட்டைச் சுவர்கள் முழுவதும் காதலர்களின் பெயர்களும் ஆபாசமான வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. இதனால் மனைவி குழந்தைகளுடன் இந்தப் பகுதிக்கு வர முடியவில்லை. இங்கு செயல்பட்டுவந்த சிறுவர் பூங்கா, பயணியர் விடுதி போன்றவை செயல்படாமல் புதர்மண்டி காணப்படுகிறது. பராமரிப்பு இல்லாததால் வட்டக்கோட்டை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. அரசு இதனை சீரமைத்து புதுப்பொலிவு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
வட்டக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் குமார் பேசுகையில், "திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் இந்தக் கோட்டை மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவந்தது. தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் இந்தக் கோட்டை பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் காதல் ஜோடிகளின் எல்லைமீறிய செயல்களால் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே அரசு இந்தக் கோட்டையை புனரமைத்து சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டிய வசதிகளை செய்துகொடுத்தால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் சுற்றுலாத் துறைக்கும் வருவாய் அதிகரிக்கும்" என்றார்.
சமூக செயற்பாட்டாளர் குமார் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோட்டை பகுதியையும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பயணியர் விடுதி, சிறுவர் பூங்கா ஆகியவற்றையும் முறையாகச் சீரமைத்து பராமரித்தால் வட்டக்கோட்டை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதையும் படிங்க: 'இலங்கைத் தமிழர்களை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை' - அரசியல் விமர்சகர் மார்க்ஸ் சாடல்!