கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் வழியாகவும் சென்னைக்கு தினமும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆனாலும், ரயிலில் முன்பதிவு செய்து டிக்கெட் கிடைக்காததால் பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து அரசு மற்றும் ஆம்னி பஸ்களை பயன்படுத்தி வருகின்றன. இதனால் கன்னியாகுமரியில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட மக்கள் மற்றும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ரயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், வந்தே பாரத் ரயிலுக்கு நாடு முழுவதும் பொது மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்ததையும் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்ததையும் அடிப்படையாக வைத்து மத்திய அரசு இந்த திட்டத்திற்கு முக்கியத்துவத்தை அளித்தது.
இதனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று அண்மையில் ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி
ஜனவரி மாத்தின் முதல் வியாழக்கிழமையான இன்று (ஜன.04) மதியம் சுமார் 2:50 மணி அளவில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து எட்டு கோச்சுகளுடன், நாகர்கோவில் - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவக்கப்பட்டது.