valentines day: தோவாளை மலர் சந்தையில் ரோஜாப்பூ விலை உயர்வு கன்னியாகுமரி: காதலர் தினம் நாளை கொண்டாடப்படுவதால் காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த பெரும்பாலும் பரிசுப் பொருட்களை அளிக்கும் போது அதனுடன் ரோஜாப்பூ சேர்த்துக் கொடுப்பதைப் பார்க்க முடியும். பரிசுப் பொருட்கள் இல்லாமல் இருந்தாலும் ரோஜாப்பூ இடம்பெறுவதைக் காணலாம்.
அந்த வகையில் நாளைய தினத்தில் அதிக அளவு பரிமாறப்படும் ரோஜாப்பூ தோவாளை மலர்ச்சந்தையில் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தேவை அதிகமாக இருந்தாலும் பனிப்பொழிவு காரணமாக ரோஜாப்பூ வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தினமும் சராசரியாக 500 கட்டுக்குமேல் ரோஜாப்பூ கொண்டுவரப்படும் நிலையில் இன்று 200 கட்டு ரோஜாப் பூக்கள் மட்டுமே தோவாளை மலர் சந்தைக்கு வந்துள்ளது. இதனால் பொதுவாக 150லிருந்து 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் ஒரு கட்டு ரோஜாப்பூ இன்று 600 ரூபாயாக உயர்ந்துள்ளது. சில்லறையாக ஒரு ரோஜாப்பூ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஓசூர், பெங்களூர் போன்ற பகுதிகளிலிருந்து தாஜ்மகால் ரோஜா, பட்டர்ரோஜா, சிவப்பு, மஞ்சள், வெள்ளை எனப் பல நிறங்களிலும் ரோஜாப்பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. காதலர் தினம் நாளை கொண்டாடப்படுவதால் தோவாளை மலர்ச்சந்தைக்கு கொண்டுவரப்படும் ரோஜாப்பூ உடனடியாக விற்பனையாகி வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நூதன முறையில் மோசடி செய்து ஹைடெக் வாழ்க்கை.. குமரியில் ஓர் இஎம்ஐ(EMI) மோசடி மன்னன்!