தமிழ்நாட்டில் வைகுண்டசாமி கோயில்களில் பிரசித்திப் பெற்ற திருத்தலங்களில் முதன்மையான பதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி ஆகும். இங்கு ஆண்டுதோறும் தை, ஆவணி, வைகாசி ஆகிய மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
தற்போது கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தகுந்த இடைவெளியை கடைபிடித்து வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார்.
முன்னதாக, அதிகாலை 4 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு கொடிபட்டம் தயாரிக்கப்பட்டது. பின்பு கொடிபட்டம் பதியை சுற்றி ஐந்து முறை வலம் வந்து கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் அய்யா சிவ சிவ சிவ அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்துடன் அய்யாவை வழிபட்டனர். ஊரடங்கு காரணமாக பதியினுள் சுமார் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.