கன்னியாகுமரி: தாலுகா வாரியாக தடுப்பூசி போடும் பணி இன்று காலை 10 மணிமுதல் தொடங்கியது. இதற்காக காலை 6 மணிமுதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டனர்.
அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. இந்நிலையில் முன்சிறை தாலுகாவில் வாழும் மக்களுக்கு அம்சி அரசு தொடக்கப்பள்ளியிலும், ஏழுதேசபத்து அரசு மேல்நிலைப்பள்ளியிலும் தலா 400 டோஸ் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
பின் திருவட்டார் தாலுகாவிற்கு, அண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியிலும், கண்ணூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் தலா 250 டோஸ் தடுப்பூசியும், மேல்புறம் தாலுகாவிற்கு மேக்கோடு அரசு உயர்நிலைப்பள்ளியிலும், புலியூர்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் தலா 400 டோஸ் தடுப்பூசியும் போடப்படுகிறது.
மேலும் தக்கலை தாலுகாவிற்கு சடயமங்கலம், மணக்கரை அரசு நடுநிலைப்பள்ளியிலும், குமாரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் தலா 350 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுவருகின்றன.
இதைத் தொடர்ந்து குருந்தன்கோடு தாலுகாவிற்கு இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கட்டைகாடு, அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் தலா 400 டோஸ் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.