பயணிகளின் அவசர தேவைக்காக பேருந்துகளில் முதலுதவிப் பெட்டிகள் பொருத்தப்பட்டிருக்கும். திடீர் உடல்நலக்குறைவு ஏற்படும் பயணிக்கு அதில் இருக்கும் அவசரகால மருந்தை பயன்படுத்தி முதலுதவி அளிக்கப்படும். உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கத்தில் பொருத்தப்பட்ட இந்த முதலுதவிப் பெட்டிகள், தற்போதுள்ள பேருந்துகளில் பெயரளவிற்கு மட்டுமே உள்ளன. உள்ளே எவ்வித மருந்துகளும் இருப்பதில்லை.
குறிப்பாக மாநகரப்பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டிகள் காலிப்பெட்டிகளாகவே இருக்கின்றன. ஒருவேளை பேருந்தில் பயணிகளுக்கு ஏதேனும் நேர்ந்தால் அவசர உதவிக்கு எந்தவித மருந்தும் இல்லாமல், மக்கள் அவதிப்படும் நிலையே உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
அப்படியே முதலுதவிப் பெட்டிகளில் மருந்துகள் இருந்தாலும்கூட, அவை என்ன மருந்துகள், அதனை எப்படி பயன்படுத்துவது போன்ற பயிற்சிகள் ஓட்டுநருக்கோ நடத்துநருக்கோ அளிக்கப்படவில்லை என அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். பேருந்தை எஃப்.சி. விடும் போது சம்பந்தப்பட்ட ஆர்டிஓ முதலுதவிப் பெட்டியில் மருந்துகள் இருக்கிறதா இல்லையா என்பதை பற்றி கண்டுகொள்வதே இல்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது போன்ற நிலைமைகளில் உரிய முதலுதவி கிடைக்காமல் பயணிகள் இறக்கும் நிகழ்வும் நடந்திருப்பதாக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு தீர்வாக முதலுதவிப் பெட்டிகளை ஒழுங்காக பராமரிப்பதுடன், அரசின் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்துடன் போக்குவரத்துத்துறைக்கு ஒரு இணைப்பை ஏற்படுத்தினால், அதன் மூலம் ஆபத்து காலங்களில் பயணிகளை காப்பாற்ற முடியும் என்றும் அவர்கள் யோசனை தெரிவிக்கின்றனர். இனியாவது அரசு விழித்துக்கொள்ளுமா?
பயனற்றுக் கிடக்கும் அரசுப் பேருந்து முதலுதவிப் பெட்டிகள்! இதையும் படிங்க: வெள்ளம் சூழ்ந்த தூத்துக்குடி: நாள்தோறும் சாலை மறியலால் திணறும் அலுவலர்கள்