கன்னியாகுமரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசுகையில், தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையின் போது என் மீது இதுவரை 22 வழக்குகள் போடப்பட்டுள்ளன. நான் இதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை. நான் கருணாநிதியின் பேரன். பரப்புரையின்போது முதல் முதலில் கைது செய்யப்பட்டவன் நான்தான்.
காலையில் கைது, மாலையில் விடுவிப்பு என தொடர்ந்து கைது செய்யப்பட்டேன். கைதுக்கு பயந்து நான் சென்னைக்கு சென்றுவிடுவேன் என நினைத்தார்கள். நான் அதற்கெல்லாம் பயப்படமாட்டேன். அப்போது என்னை கைதுசெய்த கூடுதல் டிஜிபி ராஜேஷ் மீது பெண் எஸ்பி பாலியல் புகார் அளித்துள்ளார். அதுவும் எங்கு நடந்தது என்றால் முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்கு செல்லும்போது.
பணமதிப்பிழப்புக்குப் பிறகு மோடி ஒரு காரணம் கூறியிருந்தார். அது என்னவென்று தெரியுமா? புதிய இந்தியா உருவாக்கப்படும் என்று கூறினார். நான் மூன்று ஆண்டுகளாக புதிய இந்தியாவை தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோல் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவதாக பிரதமர் கூறியிருந்தார். இதுவரை 15 காசுகள் கூட போடவில்லை.
மோடியை எதிர்க்கக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின்தான்- உதயநிதி - உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை
கன்னியாகுமரி: இந்தியாவிலேயே மோடிக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின்தான் என பரப்புரையின் போது பேசிய உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
மதுரையில் பாஜகவும் அதிமுகவும் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதாக கூறினார்கள். நான் அங்கிருந்து தான் வருகிறேன். நான் மதுரையில் இருந்து வரும்போது அந்த மருத்துவமனையை அப்படியே கையில் தூக்கிக்கொண்டு வந்து விட்டேன். (என்று கூறியவாறு தன் கையிலிருந்த ஒரு செங்கலை கூட்டத்தினரிடையே காண்பித்தார்).
இதற்காக 72 கோடி ரூபாய் செலவு செய்ததாக மோடியும் அதிமுக அமைச்சர்களும் கூறினார்கள். தமிழ்நாட்டிலேயே ஒகி புயல் தாக்கியபோது அந்த மக்களுடைய நிவாரணத்திற்காக நாம் 4,000 கோடி ரூபாய் கேட்டோம். அப்போது மத்திய அரசு தந்தது வெறும் ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் மோடி தனது விமான பயணங்களுக்காக 8,000 கோடி ரூபாய் செலவில் இரண்டு விமானங்களை வாங்கியுள்ளார். டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுவதற்காக 10, 000 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளனர்.
நீங்கள் அதிமுகவுக்கு போடுகின்ற ஓட்டு மோடிக்கு போடுகின்ற ஓட்டாக மாறிவிடும். பாஜகவினர் சட்டப்பேரவை உறுப்பினர்களை காசு கொடுத்து விலைக்கு வாங்கி விடுவார்கள். ரயில்வே, விமான நிலையம் அனைத்தையும் தனியாருக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகளின் நலன் இந்த நாட்டில் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது. தலைநகரில் 120 நாள்களாக விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். 200 விவசாயிகள் இதுவரை இறந்துவிட்டனர். இந்தியாவிலேயே மோடிக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின்தான்.
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வை ரத்து செய்து மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களை ஒதுக்க ஆணை பிறப்பித்தவர் கருணாநிதி. ஆனால் தற்போது மத்திய அரசு நுழைவுத் தேர்வை கொண்டுவந்து ஏழை எளிய மக்களின் கனவுகளை தகர்த்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 14 மாணவ, மாணவியர்கள் நீட் தேர்வால் தங்கள் கனவை நிறைவேற்ற முடியாமல் தற்கொலை செய்துக்கொண்டிருக்கிறார்கள்.
திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு தமிழ்நாட்டில் ரத்து செய்யப்படும். இதற்கான உறுதியை ராகுல்காந்தியும் சேர்த்து அளித்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் இதுவரை ஜிஎஸ்டி வரியாக 15, 000 கோடி கட்டியுள்ளோம். இதை திருப்பிக் கேட்டால் மத்திய அரசு கொடுக்க முடியாது என கூறுகின்றனர். இப்படி எல்லா விஷயங்களிலும் தமிழ்நாடை மத்திய அரசு வஞ்சிக்கிறது. அதிமுகவினர் உங்களிடம் வந்து வாக்கு கேட்டால் நீங்கள் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேளுங்கள் 'உங்க ஜெயலலிதா அம்மையார் எப்படி செத்தார்கள் என்று மட்டும் கேளுங்கள்'. இதைக் கேட்டாலே அவர்கள் ஓடிவிடுவார்கள். ஜெயலலிதா அம்மையார் எப்படி இறந்தார்கள் என்று யாருக்குமே தெரியாது. எண்பது நாள்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அடைத்து வைத்திருந்தார்கள். அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் 80 நாள்களாக ஒரு சிசிடிவி கேமரா கூட செயல்படவில்லை என்று கூறினார்கள். அவருடைய சாவில் மர்மம் உள்ளது என்று இதில் இருந்து தெரிகிறது" என்றார்.